திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் |
நான்காம் திருமுறை |
4.17 திருவாரூர் அரநெறி பண் - இந்தளம் |
எத்தீ புகினும் எமக்கொரு தீதிலை
தெத்தே யெனமுரன் றெம்முள் உழிதர்வர்
முத்தீ யனையதோர் மூவிலை வேல்பிடித்
தத்தீ நிறத்தார் அரநெறி யாரே.
|
1 |
வீரமும் பூண்பர் விசயனொ டாயதோர்
தாரமும் பூண்பர் தமக்கன்பு பட்டவர்
பாரமும் பூண்பர்நற் பைங்கண் மிளிரர
வாரமும் பூண்பர் அரநெறி யாரே.
|
2 |
தஞ்சவண் ணத்தர் சடையினர் தாமுமோர்
வஞ்சவண் ணத்தர்வண் டார்குழ லாளொடுந்
துஞ்சவண் ணத்தர்துஞ் சாதகண் ணார்தொழும்
அஞ்சவண் ணத்தர் அரநெறி யாரே.
|
3 |
விழித்தனர் காமனை வீழ்தர விண்ணின்
றிழித்தனர் கங்கையை யேத்தினர் பாவங்
கழித்தனர் கல்சூழ் கடியரண் மூன்றும்
அழித்தனர் ஆரூர் அரநெறி யாரே.
|
4 |
துற்றவர் வெணடலை யிற்சுருள் கோவணந்
தற்றவர் தம்வினை யானவெல் லாமற
அற்றவர் ஆரூர் அறநெறி கைதொழ
உற்றவர் தாமொளி பெற்றனர் தாமே.
|
5 |
கூடர வத்தர் குரற்கிண் கிணியடி
நீடர வத்தர்முன் மாலை யிடையிருள்
பாடர வத்தர் பணமஞ்சு பைவிரித
தாடர வத்தர் அரநெறி யாரே.
|
6 |
கூடவல் லார்குறிப் பில்லுமை யாளொடும்
பாடவல் லார்பயின் றந்தியுஞ் சந்தியும்
ஆடவல் லார்திரு வாரூர் அரநெறி
நாடவல் லார்வினை வீடவல் லாரே.
|
7 |
பாலை நகுபனி வெண்மதி பைங்கொன்றை
மாலையுங் கண்ணியு மாவள சேவடி
காலையு மாலையுங் கைதொழு வார்மனம்
ஆலயம் ஆரூர் அரநெறி யார்க்கே.
|
8 |
முடிவண்ணம் வானமின் வண்ணந்தம் மார்பிற்
பொடிவண்ணந் தம்புக ழூர்தியின் வண்ணம்
படிவண்ணம் பாற்கடல் வண்ணஞ்செஞ் ஞாயி
றடிவண்ணம் ஆரூர் அரநெறி யார்க்கே.
|
9 |
பொன்னவில் புன்சடை யானடி யின்னிழல்
இன்னருள் சூடியெள் காதுமி ராப்பகல்
மன்னவர் கின்னரர் வானவர் தாந்தொழும்
அன்னவர் ஆரூர்அரநெறி யாரே.
|
10 |
பொருள்மன் னனைப்பற்றிப் புட்பகங் கொண்ட
மருள்மன் னனையெற்றி வாளுட னீந்து
கருள்மன் னுகண்டங் கறுக்க நஞ்சுண்ட
அருள்மன்னர் ஆரூர் அரநெறி யாரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |